புதுச்சேரியில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவியாக இருப்பவர் டாக்டர் வித்யா ராம்குமார். இவர் கடந்த மாதம் 19–ந் தேதி புதுவை டி.ஜி.பி.யிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் சிலர் சிறுமிகளை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் படி சி.ஐ.டி. போலீசாருக்கு டி.ஜி.பி. காமராஜ் உத்தரவு பிறப்பித்தார்.
இது தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி புதுவையை சேர்ந்த அருள்மேரி(வயது45), புஷ்பா, ரகுமான், காயத்ரி, மாணிக்கம் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
விசாரணை நடத்த முடிவு
இந்த நிலையில் பிடிபட்ட விபசார கும்பல் மூலம் புதுவையில் பல சிறுமிகள் சீரழிக்கப்பட்டு இருக்கலாம் என்று சி.ஐ.டி. போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே புதுவையில் மாயமான சிறுமிகளின் பட்டியலை சி.ஐ.டி. போலீசார் சேகரித்து அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
14 வயது சிறுமி
மேலும் விபசார கும்பல் வைத்திருந்த டைரியையும் கைப்பற்றி அதில் உள்ள செல்போன் எண்களை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 16 வயது இளம் பெண்ணுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து அந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அப்போது 14 வயது சிறுமி ஒருவர் அவருடன் இருப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அந்த சிறுமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டாள்.
இந்த நிலையில் அந்த சிறுமி லாஸ்பேட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக சி.ஐ.டி. பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் அங்கு விரைந்து சென்று அந்த சிறுமியை பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினர்.
குழந்தையுடன் மீட்பு
அப்போது அந்த சிறுமியும் விபசார கும்பலிடம் சிக்கி சீரழிந்தது தெரிய வந்தது. சிறுமியை அந்த கும்பல் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளது. இதன் மூலம் அவள் கர்ப்பமானாள். ஒரு மாதத்திற்கு முன்பு அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையுடன் இருந்தபோது தான் போலீசார் அவளை கண்டு பிடித்தனர். சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சிறுமி தெரிவித்த தகவல்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அவள் கூறிய விவரம் வருமாறு,
வறுமை
எனக்கு அம்மா இல்லை. அப்பா கட்டிட வேலை செய்கிறார். நான் அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்தேன். எங்கள் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் வீட்டு வேலை செய்து கொண்டே பள்ளிக்கும் சென்று வந்தேன்.
ஒரு நாள் நான் லாஸ்பேட்டை பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது வக்பாகீரப்பாளையத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் என்னை அழைத்து பேசினார். அவர் தவளகுப்பத்தை சேர்ந்த புஷ்பா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். மேலும் என்னிடம் அன்பாக பேசி பணம் கொடுத்தார்.
விபசாரத்தில் ஈடுபட வைத்தார்
எப்போது பணம் வேண்டுமானாலும் என்னிடம் வா தருகிறேன் என்று கூறினார். புஷ்பாவிற்கு தேங்காய்திட்டில் ஒரு வீடு இருந்தது. அங்கு என்னை வரும்படி சொன்னார். நான் அங்கு சென்றேன். அங்கு பல ஆண்கள் இருந்தனர். அதில் ஒரு ஆணுடன் என்னை தனியாக இருக்கும்படி கூறினார். அந்த ஆள் சொல்கிறபடி நடந்து கொண்டால் நிறைய பணம் தருவதாக கூறினார். அதை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த ஆள் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.
அதன்பிறகு அடிக்கடி அந்த வீட்டுக்கு சென்றேன். பல ஆண்களுடன் என்னை விபசாரத்தில் ஈடுபட வைத்தார். அதன் பிறகு நான் பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்தி விட்டேன். இதையடுத்து என்னுடைய தோழிகளையும் அழைத்து வரும்படி புஷ்பா என்னிடம் கூறினார். அப்படி அழைத்து வந்தால் அவர்களுக்கும் பணம் தருகிறேன். உனக்கும் கூடுதலாக பணம் தருகிறேன் என ஆசை வார்த்தை கூறினார்.
பள்ளித் தோழிகள்
இதனால் எனது வகுப்பு தோழியிடம் இதை கூறினேன். அவள் அவளது பக்கத்து வீட்டில் இருந்த பிளஸ்–1 மாணவிடம் இதை கூறினாள். அவர்கள் 2 பேரும் என்னுடன் புஷ்பா வீட்டிற்கு வர சம்மதித்தனர்.
அவர்களையும் விபசாரத்தில் ஈடுபட வைத்தனர். ஏதாவது ஒரு வீட்டை குறிப்பிட்டு அங்கே எங்களை போக சொல்வார்கள். அங்கு வாடிக்கையாளர்கள் வந்துவிடுவார்கள்.
இந்த நிலையில் நான் கர்ப்பம் அடைந்தேன். கர்ப்பம் ஆனது கூட எனக்கு தெரியாது. எனது வயிறு பெரிதாக வந்த போதுதான் நான் கர்ப்பம் அடைந்ததை உணர்ந்தேன். கருவை கலைக்க முயற்சி செய்தபோது குழந்தை பெரிதாக வளர்ந்து விட்டது என்றும் இப்போது கலைத்தால் உயிருக்கு ஆபத்து என்றும் கூறி விட்டார்கள். எனவே நான் கருவை கலைக்கவில்லை. புஷ்பாவின் உதவியுடன் குழந்தை பெற்று எடுத்தேன்.
இவ்வாறு இந்த சிறுமி கூறினாள்.
இதனையடுத்து குழந்தையுடன் அந்த சிறுமியை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Post a Comment